கோவை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புகழ்பெற்று விளங்கும் பழம் மற்றும் காய்கறி விற்பனை நிலையம் கோவை பழமுதிர் நிலையம் (KPN).

சென்னை வானகரத்தில் 1.5 லட்சம் சதுர அடியிலும் கோவையில் 20000 சதுர அடியிலும் சேமிப்பு கிடங்குகளைக் கொண்ட KPN நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ. 800 கோடி.

இதில் சுமார் 70 சதவீத பங்குகளை வெஸ்ட்பிரிட்ஜ் கேப்பிடல் என்ற முதலீட்டு நிறுவனத்திற்கு விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள 30 சதவீத பங்குகள் அதன் நிர்வாக இயக்குனர் செந்தில் நடராஜன் மற்றும் இந்நிறுவனத்தை உருவாக்கியவர்களிடம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள ‘மனி கண்ட்ரோல்’ KPN Farm Fresh-ன் பெரும்பான்மையான பங்குகளை வாங்க 550 முதல் 600 கோடி ரூபாய் வரை வெஸ்ட்பிரிட்ஜ் கேப்பிடல் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

1960 ம் ஆண்டு கோயம்புத்தூரில் ஒரு தள்ளு வண்டியில் பழ வியாபாரத்தை தொடங்கிய நடராஜன் மற்றும் அவரது சகோதரர் பின்னர் 1965 ம் ஆண்டு பழமுதிர் நிலையம் என்ற பெயரில் பழக்கடையாக மாற்றினர்.

தந்தையை இழந்த மகனாக தனது சகோதரர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களைக் காப்பாற்ற பழ வியாபாரத்தை தொடங்கிய நடராஜன் படிப்படியாக முன்னேறி 2012 ம் ஆண்டு KPN Farm Fresh என்ற பெயரில் மிகப்பெரிய நிறுவனமாக மாற்றினார்.

தற்போது இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ள இவரது மகன் செந்தில் நடராஜன் இந்த நிறுவனத்தை தென் மாநிலங்கள் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கும் நிலையில் அதனை வெஸ்ட்பிரிட்ஜ் கேப்பிடல் நிறுவனத்தின் முதலீட்டின் மூலம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளார்.

தினமும் 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி லாபகரமாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் வெஸ்ட்பிரிட்ஜ் கேப்பிடல் நிறுவனத்தின் முதலீடு குறித்து இன்னும் இவ்விரு நிறுவனங்களும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.

அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் நிதி பங்களிப்பில் இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து வரும் வெஸ்ட்பிரிட்ஜ் கேப்பிடல் நிறுவனம் ஏற்கனவே ‘மில்கி மிஸ்ட்’ நிறுவனத்தில் முதலீடு செய்யப்போவதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.