ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் காபா மைதானத்தில் நடைபெற்றது.

216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் என்று வலுவாக இருந்தது.

இன்று நான்காவது நாள் ஆட்டம் துவங்கிய நிலையில், மேற்கு இந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து பந்துவீச்சாளர் சமர் ஜோசப்பின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக அவுட்டாகி வெளியேறினார்கள்.

சமர் ஜோசப்

சமர் ஜோசப் 11.5 ஓவர்கள் வீசி 68 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார் 113 ரன்னில் 3வது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய அணி 207 ரன்னுக்கு ஆலவுட் ஆனது.

94 ரன்களில் 8 விக்கெட்டை அடுத்தடுத்து பறிகொடுத்த ஆஸ்திரேலிய அணியின் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய சமர் ஜோசப் அதில் 5 வீரர்களை கிளீன் போல்ட் ஆக்கினார்.

5 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கரீபியன் பிரிமியர் லீக் போட்டியின் போது மைதான பாதுகாவலராக இருந்த சமர் ஜோசப் வெறும் காலுடன் ஓடிவந்து பந்துவீசியதைப் பார்த்த பயிற்சியாளர் சமர் ஜோசப்பின் திறமையை அறிந்து அவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமான முதல் டெஸ்டில் 5 விக்கெட் எடுத்த சமர் ஜோசப் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி 8 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெறச் செய்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் 27 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் போட்டியில் வென்றதுடன் தொடர்ந்து 11 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.