ஆஸ்திரேலியாவின் காபா மைதானத்தில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

27 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியதற்கு காரணமாக அமைந்தது மேற்கு இந்திய தீவுகள் அணியின் சமர் ஜோசப்-பின் பந்துவீச்சு என்றால் அது மிகையாகாது.

கயானாவைச் சேர்ந்த 24 வயதான சமர் ஜோசப் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வரை மால் ஒன்றில் செக்யூரிட்டியாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

மாலை நேரங்களில் அருகில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடும் மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர்களை பார்ப்பதற்காக வரும் சமர் ஜோசப், சில நேரங்களில் பயிற்சி செய்யும் பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசுவதை பொழுதுபோக்காக கொண்டிருந்தார்.

சமர் ஜோசப் பந்துவீசுவதை அருகில் இருந்து பார்த்த இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் பயிற்சியாளரும் தமிழருமான பிரசன்னா அவரது திறமையை அங்கீகரிக்கும் விதமாக அவரை அணியில் சேர்க்க பரிந்துரைத்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா வந்த மேற்கு இந்திய தீவுகள் அணியில் இடம் பெற்ற சமர் ஜோசப் தனது முதல் போட்டியிலேயே 5 விக்கீட்டுகளை வீழ்த்தினார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இன்று 68 ரன்கள் கொடுத்து 7 விக்கெட் எடுத்ததோடு மேற்கு இந்திய தீவுகளின் வரலாற்று வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

சமர் ஜோசபின் இந்த பந்துவீச்சு குறித்து பயிற்சியாளர் பிரசன்னா சமூகவலைத்தளம் ஒன்றுக்கு தமிழில் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.