கொல்கத்தா: ரேசன் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சங்கர் ஆதியா அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மம்தா பானர்ஜி ஆட்சி செய்து வரும் மேற்கு வங்கத்தில் பல “போலி” ரேஷன் கடைகள் மற்றும் ரேஷன் கார்டுகள் மற்றும் மதிய உணவில் “மோசடி” நடைபெற்று வருகிறது. இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஏற்கனவே தெரிவித்ததுடன், இந்த முறைகேட்டில் மம்தா கட்சியை சேர்ந்த நிர்வாகிகளே ஈடுபட்டு வருகின்றனர், இதை மாநிலஅரசு கண்டுகொள்வதில்லை என்றும், ரேஷன் ஊழல் குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்புகளால் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கடந்த ஆண்டு அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதுபோல பாஜகவும் குற்றம் சாட்டியிருந்தது.
இதைத்தொடர்ந்து, ரேசன் கடை ஊழல் தொடர்பாக, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, பல இடங்களில் ரெய்டு நடத்தி விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், நேற்று (ஜனவரி 5ந்தேதி) இந்த முறைகேடு தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள், நகராட்சியின் முன்னாள் தலைவரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சங்கர் ஆதியாவின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள அவரது வளாகத்தில் சோதனை நடத்த வந்தனர். அப்போது, அமலாக்கத்துறை வாகனங்களை தாக்கிய அவரது ஆதரவாளர்கள் சில அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருந்தாலும், அமலாக்கத்துறை அதிகாரிகள், சங்கர் ஆதியாவீடு அலுவலகம் உள்பட பல இடங்களல் தொடர் சோதனை நடத்தினர். சுமார் 17 மணி நேர சோதனைக்குப்பின் நேற்று நள்ளிரவு சங்கர் ஆத்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திரிணாமுல் தொடணடர்கள், கைது செய்யப்பட்ட சங்கர் ஆதியாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் செல்ல விடாமல் தடுத்தனர். மேலும், சங்கர் ஆத்யாவின் ஆதரவாளர்கள் கல்வீச்சு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் பணியில் இருந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் அவர்களை விரட்டியடித்தனர். அதன்பின் அதிகாரிகள் சங்கர் ஆத்யாவை அழைத்துச் சென்றனர்.