கொல்கத்தா:
மேற்குவங்க மாநில சட்டப்பேரவை காலவரம்பின்றி ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கருத்துக்கு, மேற்கு வங்க ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.

அரசியலமைப்பு சட்டத்தின் 174-வது பிரிவு வாயிலாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, நடந்து கொண்டிருக்கும் மேற்கு வங்க சட்டப்பேரவை கூட்டத்தொடரை, பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் காலவரம்பின்றி ஒத்திவைப்பதாக அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் அறிவித்தார். இதற்கு, பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு விளக்கம் அளித்த ஆளுநர் தன்கர், மாநில அரசின் பரிந்துரையின் பேரிலேயே சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒத்திவைத்ததாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒரு மாநிலத்தின் தலைவராக உள்ள ஆளுநர், அந்த மாநிலத்திற்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேற்குவங்க ஆளுநரின் செயல் விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதை கொடுப்பதுதான் ஜனநாயகத்திற்கு அழகு எனக்கூறியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசியலமைப்பை நிலைநிறுத்த ஆளுநர் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பதிவுக்கு மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் விளக்கமளித்துள்ளார். உண்மையை ஆராயாமல் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட கருத்துகள், கடுமையானதாகவும், மனதை புண்படுத்தும் வகையிலும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டதன் பேரிலேயே சட்டப்பேரவையை ஒத்திவைத்ததாகவும் மேற்கு வங்க ஆளுநர் தன்கர் குறிப்பிட்டுள்ளார்.