மேற்கு வங்க சட்டப்பேரவை இடைத் தேர்தல் தேதியை அறிவிக்க மம்தா வலியுறுத்தல்

Must read

கொல்கத்தா

மேற்கு வங்க சட்டப்பேரவை இடைத் தேர்தல் தேதியை உடனடியாக அறிவிக்கத் தேர்தல் ஆணையத்தை முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

சமீபத்தில் நடந்த மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திருணாமுல் கட்சி அறுதிப் பெரும்பான்மை  பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது.   அங்கு ஆட்சி அமைக்கும் கனவில் இருந்து பாஜகவுக்கு இது பேரிடியாக அமைந்தது.  தற்போது மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையில் 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டி உள்ளது.  ஆனால் இதுவரை நடத்தப்படவில்லை.

மேற்கு வங்க மாநில முதல்வரும் திருணாமுல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று செய்தியாளர்களிடம், “தேர்தல் முடிந்து நான்கு மாதங்கள் முடிந்துவிட்டது. கொரோனா தொற்று பரவல் தற்போது முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வாக்களிப்பதற்காக உரிமை இருக்கிறது.

ஆகவே 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையம் உடனடியாக அறிவிக்க வேண்டும்.  மேலும் இது தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு பாஜவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.  தற்போது முதல்வராக மம்தா உள்ளதால்  6 மாதத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்பது விதி என்பதும்  குறிப்பிடத்தக்கது.

 

More articles

Latest article