நியூயார்க்: நியூயார்க் காவல்துறை அதிகாரிகள் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டில் வெகு வேகமாக இந்த வைரஸ் பரவி வருகிறது.

நியூயார்க் நகர காவல்துறையில் 7 சதவீதம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் விடுப்பில் உள்ளனர். அதாவது 3200 போலீசார் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறையே இந்த பரவலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந் நிலையில் நியூயார்க் நகர போலீசில் 211 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. எங்களுக்கு ஒரு பெட்டி முழுவதும் முகக்கவசங்களும், கையுறைகள் மட்டுமே கொடுத்துள்ளனர், அவை போதவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீசார் அனைவரும் மருத்துவ பரிசோதனைகளுக்கு ஆளாக்கப்படுவது இல்லை. யாருக்கு காய்ச்சல் இருக்கிறதோ அவர்களுக்கும் மட்டும் பரிசோதனை செய்யப்படுகிறது, அந்த சோதனைகளின் முடிவில் கொரோனா இல்லை என்றாலும் அந்த போலீசாருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற சக ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ், டெட்ராய்ட் காவல்துறை அதிகாரிகள் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவுகளில் கண்டறியப்பட்டது. அவர்களில் டெட்ராய்ட் போலீஸ் அதிகாரி ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.