சண்டிகர்: பஞ்சாபில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரே வாரத்தில் 27 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.  தொறறு பாதிக்கப்பட்ட மாணவர்கள்  அவரவர் வீடுகளில் தடுமைப்படுத்தப்பட்டு அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு (2020) மார்ச் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளதால், பல மாநில அரசுகள் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளன.   தமிழகத்தில்  செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், பள்ளிகளை திறக்கமாலா என்பது குறித்து நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 48 சதவிகித பெற்றோர்கள், குழந்தைகள் கொரோனா தடுப்பூசி பெறும் வரை தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை என்று தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், பஞ்சாப் மாநில அரசு கடந்த 2ந்தேதி முதல் (ஆகஸ்டு) பள்ளிகளை திறந்துள்ளது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஏராளமான மாணாக்கர்களும் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில்,  பல மாவட்டங்களில் மாணாக்கர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதைத்தொடர்ந்து,  நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியாக உள்ளதாகவும், மாநிலத்தில்,  லுதியானா, அபோகார், நவன்சாகர், அமிர்தசரஸ் ஆகிய மாவட்டங்களில் உள்ள 5 அரசுப் பள்ளிகளில் 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து,  மற்ற மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து தினமும் பத்தாயிரம் பரிசோதனைகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 47 மாணாக்கர்களும், அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் உடல்நிலை சுகாதாரத்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும்   மாநில சுகாதாரத்துறை  தெரிவித்து உள்ளது.

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது, பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தைகள் உடல், மனம் ரீதியாக பாதிக்கப்படுவதால், பள்ளிகளை திறக்க முன்னுரிமை அளிக்கலாம்! சவுமியா சுவாமிநாதன்