பெங்களூரு
ஜெயின் துறவி ஒருவர் தாக்கப்பட்டதாக பொய்ச் செய்தி வெளியிட்டதாக எழுந்த புகாரில் இணைய தள அமைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவை சேர்ந்தவர் மகேஷ் விக்ரம் ஹெக்டே. இவர் ’போஸ்ட்கார்ட் நியூஸ்’ என்னும் செய்தி இணையதளம் ஒன்றை அமைத்து நடத்தி வருகிறார். இவர் பல பரபரப்பூட்டும் அரசியல் செய்திகளை தனது தளத்தில் பதிந்து வருகிறார். குறிப்பாக கர்னாடக அரசுக்கும் முதல்வருக்கும் எதிராக பல செய்திகளை பதிந்து வருகிறார்.
இந்த மாதம் 18ஆம் தேதி அன்று இந்த தளத்தில் ஒரு செய்தி பதியப்பட்டது. அந்தச் செய்தியில் சமண மதத் துறவி ஒருவர் சிரவணபெலகுலாவில் நடைபெற உள்ள மகாமத்சாபிஷேகா என்னும் மத நிகழ்வில் கலந்துக் கொள்ள சென்றுள்ளார் எனவும் அவர் இஸ்லாமிய இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார் எனவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அத்துடன் சித்தராமையாவின் ஆட்சியில் யாருமே பாதுகாப்பாக இல்லை எனவும் குறிப்பிடப் பட்டிருந்தது.
இது தவறான செய்தி என தெரிவித்த காவல் துறை இந்த செய்தியின் மூலம் அரசுக்கு இந்த தளம்அவப் பெயர் உண்டாக்குவதாக கூறி உள்ளது. அதை ஒட்டி அந்த தளத்தின் அமைப்பாளரான மகேஷ் விக்ரம் ஹெக்டேவை நேற்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே இவர் மீது ராணி சென்னம்மாவை பற்றி தவறாக செய்தி பதிந்தது பற்றிய புகாரும் உள்ளது.
இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர், “விக்ரம் ஹெக்டே கைது செய்யப்பட்டது உண்மைதான். அவர் சமணத் துறவி பற்றிய தவறான செய்தி வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். சமணத் துறவி சிரவணபெல குலாவுக்கு சென்றுக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி உள்ளது.
அதை ஓட்டியவர் குடிபோதையில் இருந்துள்ளார். வாகன ஓட்டி இஸ்லாமியர் அல்ல.
இந்த செய்தியை பலரும் படித்துள்ளனர். இது அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் மத ஒற்றுமையை குலைக்கும் வகையிலும் அமைந்துள்ள செய்தி ஆகும். இதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.’ என தெரிவித்துள்ளார்