டில்லி

டில்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு விமான மையத்தில் தானியங்கி லக்கேஜ் பாதை பழுதடைந்ததால் பயணிகள் கடும் அவதியுற்றனர்.

எப்பொழுதும் கூட்டத்துடன் காணப்படும் இந்திய விமான நிலையங்களில் டில்லி விமான நிலையம் முதன்மை வகிக்கிறது.    பொதுவாகவே விமான நிலையங்களில் பயணிகளின் லக்கேஜ் தானியங்கி பாதையில் இடப்பட்டு அங்கு ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்டு விமானத்தை சென்றடையும்.   அதே போல விமானத்தில் வரும் பயணிகளில் லக்கேஜுகளும் தானியங்கி பாதையில் பயணிகளை வந்தடையும்.

நேற்று இந்த தானியங்கி பாதையில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளது. தொழில் நுட்பக் கோளாறு காரணமாக இந்தப் பழுது ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.   இதனால் பயணிகளின் லக்கேஜுகள் ஒவ்வொன்றாக சோதிக்கப்பட்டு ஆட்கள் மூலம் மாற்றப்பட்டது.  இந்த தாமதத்தினால் பல விமானங்கள் தாமதமாக கிளம்பின.

அத்துடன் விமானத்தில் இருந்து வரும் பயணிகளின் லக்கேஜுகளும் இடம் மாறியதால் பயணிகள் தங்களின் லக்கேஜுகளை தேடி அங்கும் இங்கும் அலைந்து அவதியுற்றனர்.    ஆத்திரமைடைந்த ஒரு சில பயணிகள்  விமான நிலைய நிர்வாகத்தை எதிர்த்து கோஷமிட்டனர்.    அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

இது குறித்து டில்லி பன்னாட்டு விமான மையத்தின் அதிகாரி ஒருவர், “தற்போது விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள் சேர்ந்துள்ளதால் பயணிகள் வரத்து அதிகமாகி உள்ளது.  தற்போது அபாயமான பொருட்கள் என கருதப்படும் லைட்டர்கள், பவர் பேங்குகள் போன்ற பொருட்கள் பயணிகளின் லக்கேஜுகளில் உள்ளன.  அவற்றை நேரடியாக பரிச்சொதனை செய்வதால் வழக்கமான நேரத்தை விட 30% அதிக நேரமாகிறது.” என தெரிவித்தார்.