திருச்சி:
இன்று காலை ஜாமினில் விடுதலையான பேராசிரியர் ஜெயராமன், கதிராமங்கலத்தில் அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டம் இன்று 84வது நாளை எட்டியுள்ளது. மக்களின் போராட்டத்தை மத்திய மாநில அரசுகள் மக்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் தவிர்த்து வருகின்றன.
ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுக்க குழாய்கள் பதிப்பதினால் விவசாய நிலங்கள் பாதித்து, குடிநீர் ஆதாரம் பாதிப்பதாக கூறி அப்பகுதி மக்கள், இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது பொதுமக்கள் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டு, தடியடியில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து போராட்டத்தை தூண்டி விட்டதாக பேராசிரியர் ஜெயராமன், தர்மராஜன், ரமேஷ் உள்பட 10 பேரை கைது செய்து, கடந்த ஜூலை 1ந்தேதி முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி கதிராமங்கலத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று 84வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், தங்களை ஜாமினில் விடுவிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 8 பேர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து பேராசிரியர் ஜெயராமன் உள்பட 8 பேருக்கு நிபந்தனை ஜாமின் அளித்து, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த 43 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரும் இன்று காலை 8 மணிக்கு திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட னர்.
சிறையில் இருந்து வெளியான பேராசிரியர் ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கதிராமங்கலத்தில் அமைதியான முறையில் நியாயம் கேட்டு போராடிய மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலவரமாக்கினர்.
இந்த சம்பவத்தில் கதிராமங்கலம் கிராம குடிநீரை நஞ்சாக மாற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம், இதை தடுக்க தவறிய அதிகாரிகளும், தடியடி நடத்திய போலீசாரும் தான் குற்றவாளிகள்.
எங்களுக்காக குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.