சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ், பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இதுகுறித்து பேசிய ஓபிஎஸ், “எங்களுடைய பலத்தை நிரூபிக்கவே ராமநாதபுரத்தில் போட்டியிடுவதாகவும், தனி சின்னத்தில் போட்டியிடுகிறேன் என தெரிவித்து உள்ளார்.
அதிமுகவின் பிளவுக்கு பிறகு, அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனால், ஓபிஎஸ் தனது சில ஆதரவாளர்களுடன் அடுத்து வழக்குகளை போட்டு, அதிமுகவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். இறுதியாக, தனது அணியை அதிமுக ஓபிஎஸ் என அறிவிக்க வேண்டும் என்றும், இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
இதற்கிடையில், பாஜக கூட்டணியில் சேர்ந்த ஓபிஎஸ்-ஐ, தாமரை சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் பரவின. ஆனால், ஓபிஎஸ் அதை ஏற்காத நிலையில், ராமநாதபுரம் தொகுதி மட்டும் ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கியது பாஜக. இதையடுத்து ராமநாதபுரத்தில், தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
முன்னதாக பாஜகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த ஓபிஎஸ், தங்களது அணிக்கு 10க்கும் மேற்பட்ட தொகுதிகள் வேண்டும் என கூறி வந்தார். ஆனால், பாஜக தலைமை அதை ஏற்க மறுத்து வந்த நிலையில், ஒரே ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்கியது. இதையடுத்து, ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ” ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன் என அறிவித்தவர், நானே களத்தில் நின்று என்னுடைய பலத்தை நிரூபிக்கவும், தொண்டர்கள் பலத்தை நிரூபிக்கவும் தனிச்சின்னத்தில் நிற்பதாக தெரிவித்தவர், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காகத் தான் தேர்தலில் களம் இறங்குகிறேன். இரட்டை இலையை பெறுவதற்கு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம் என்றார்.
பாஜகவில் ஒரே ஒரு தொகுதிதானே கிடைத்துள்ளது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, பாஜகவில் உரிய அன்பும், அங்கீகாரமும் கிடைத்துள்ளது என்று கூறிவிட்டு எஸ்கேப்பானார்.