டெல்லி:  அமலாக்கத்துறை சார்பில்  2ஜி வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி மேல்முறையீடு செய்துள்ளது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.  இந்த  வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படுமா? அல்லது தள்ளுபடி செய்யப்படுமா என்பது இன்றைய தீர்ப்பில்  தெரிய வரும்.

கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். திமுகவைச் சேர்ந்த ஆ.ராஜா, தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்து வந்தார். அப்போது,  நடைபெற்ற 2ஜி அலைக்கற்றை (2ஜி ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு விவகாரம் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.  2ஜி அலைக்கற்றையை பகிரங்க ஏலம் விடாமல் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படை பின்பற்றப்பட்ட்டது. இதன் மூலம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தினார் ஆ.ராசா என்பது மத்திய கணக்கு தணிக்கைக் குழுவின் குற்றச்சாட்டு.  மேலும், இதன்மூலம் கிடைத்த ஊழல் பணத்தைக்கொண்டு கலைஞர் டிவி தொடங்கியதாகவும் புகார்கள் கூறப்பட்டு வழக்குகள் நடைபெற்றது.

இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது.  சுமார் ஒரு ஆண்டுக்கு பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுதலையாகினர். ஆனால், வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி நீதிபதி ஓபி ஷைனி , 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் 2018-ம் ஆண்டு விடுதலை செய்து தீர்ப்பளித்தது. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறியது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதையடுத்து,  நீதிபதி ஓபி ஷைனியின்   தீர்ப்புக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்டவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. தீர்ப்பை தொடர்ந்தே,   2 ஜி வழக்கில் ஆ ராசா, கனிமொழி மீதான வழக்கு மீண்டும்  விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுமா? இல்லையா? என்பது தெரிய வரும்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டால், கனிமொழி மற்றும் ஆ ராசா ஆகியோருக்கு மீண்டும்  சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது