புதுச்சேரியில் மாட்டுக்கறி சட்டம் அமல்படுத்தமாட்டோம்! முதல்வர்

Must read

புதுச்சேரி,

த்திய அரசு கொண்டுவந்துள்ள மாட்டுக்கறி சட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்தமாட்டோம் என்று முதல்வர் நாராயணசாமி சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

புதுவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று  கேள்வி நேரம் முடிந்ததும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டு இறைச்சி விற்பனை தடை சட்டம் தொடர்பாக பிரச்சனையை கிளப்பினார்.

அப்போது, நாடு முழுவதும் மாட்டு இறைச்சி விற்பனை, தோலுக்காக விலங்குகளை கொல்வது போன்றவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. புதுவையில் ஏராளமான மக்கள் மாட்டு இறைச்சியை விரும்பி சாப்பிடுகிறார்கள். மேலும் தோல் தொழிலும் பிரதானமாக உள்ளது. 500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை புதுவையில் அமல்படுத்தக்கூடாது.

இதற்கு முதல்-அமைச்சர் உரிய உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

இதே கருத்தை தி.மு.க. உறுப்பினர் சிவா, என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர் அசோக் ஆனந்து ஆகியோரும் வற்புறுத்தினார்கள்.

இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

புதுவை பிரெஞ்சு கலாச்சாரத்தை கொண்ட மாநிலம். இங்கு பெரும்பாலான மக்கள் மாட்டு இறைச்சி சாப்பிடுகிறார்கள்.

குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாக மாட்டு இறைச்சி உள்ளது. மேலும் தோல் தொழிலிலும் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசின் தடை சட்டத்தை நிச்சயம் அமல்படுத்த மாட்டோம்.

மத்தியஅரசின் இந்த சட்டத்துக்கு பெரும்பாலான மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  மத்திய அரசு தன்னிச்சையாக கொண்டு வந்த இந்த சட்டத்தை புதுவையிலும்  அமல்படுத்த மாட்டோம்.

தேவைப்பட்டால் புதுவையில் மாட்டு இறைச்சி விற்பனையை தொடர தனிச்சட்டம் கொண்டு வந்து பாதுகாப்பு அளிக்கப்படும்.

இது சம்பந்தமாக பிரதமருக்கு நான் இன்றே கடிதம் அனுப்ப இருக்கிறேன் என்றார்.

நேற்று நடைபெற்ற இந்திராகாந்தி நூற்றாண்டு விழாவில் பேசிய நாராயணசாமி  தனிமனித சுதந்திரத்தில் தலையிட்டால் நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்றும் பிரதமர் மோடியால் நிம்மதியாகத் தூங்க முடியாது என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article