சென்னை: சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட்மீதான விவாதம் தொடங்கிய நிலையில்,  முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, அதிமுக அளித்த வாக்குறுதிகளான இலவச செல்போன், இலவச மினரல் வாட்டர் உள்ளிட்டவை என்னாச்சு ? என  முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுபிபினார்.

தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் ஆகஸ்டு 13ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாள் தமிழக நிதிநிலை அறிக்கை2021-22 தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து 14ந்தேதி முதன்முறையாக விவசாயத்துக்கு என தனி வேளாண்ட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஒத்தி வைக்கப்பட்ட கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியது. பொதுபட்ஜெட், மற்றும் விவசாய பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

பட்ஜெட் மீதான பொதுவிவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக எம்எல்ஏ ஆர்.பி. உதயகுமார், ‘நிதிநிலை அறிக்கை என்பது குட்டிப்பூனையை தாய்ப்பூனை கவ்வுவது போல் இருக்க வேண்டும் ஆனால் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை பூனை எலியை கவ்வுவது போல உள்ளது.

எனக்கு பொருளாதாரம் தெரியாது, ஆனால் மக்களின் பசியும், ஏழ்மையும் தெரியும். டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு அடிப்படையே அதிமுக அரசு கொண்டு வந்த மடிக்கணினி திட்டம் தான்’ என்றார்.

அதிமுக உறுப்பினர் ஆர்.பி உதயகுமார் எழுப்பிய கேள்விக்கு பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அளித்த பதிலில், ‘அதிமுக ஆட்சியில் இலவச செல்போன் கொடுக்கும் என கூறினீர்கள் கொடுத்தீர்களா? மோனோ ரயில் கொண்டு வருவோம் என சொன்னீர்கள் கொண்டு வந்தீர்களா? ஆவின் பால் விலை குறைப்பு வாக்குறுதிகளை நிறைவேற்றுனீர்களா?,அதிமுக ஆட்சி நிறைவேற்றாமல் விட்ட வாக்குறுதிகளின் பெரிய பட்டியலே உள்ளது என பதில் அளித்தார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து எக்காரணத்தாலும் பின்வாங்க மாட்டோம்.நிதி பற்றாக்குறையை சரி செய்து தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிச்சயமாக நிறைவேற்றுவோம். வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றவில்லை எனக்கூறி நாங்கள் தப்பித்துக்கொள்ள பார்க்கவில்லை என்றணுர்.

தொடர்ந்து பேசிய ஆர்.பி.உதயகுமார்,  நிதிநிலையை காரணம் காட்டி திமுக அரசு வாக்குறுதியை கைவிட்டுக்கூடாது என்று கூறியதுடன், கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 715 திட்டங்களில் 537 திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், மக்களுக்காகத்தானே திட்டங்கள் தவிர, திட்டங்களுக்காக மக்கள் இல்லை என்றார்.

அதையடுத்து பேசிய முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அனைத்து இல்லத்தரசிகளுக்கும் உரிமைத் தொகை என்று அறிவித்துவிட்டு தற்போது ஏழை இல்லத்தரசிகளுக்கு மட்டும் என்று கூறுகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், நாங்கள் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, பின்வாங்க முயற்சிக்கவில்லை என்று கூறியதுடன், விவசாய நகைக்கடன்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன, அதை எல்லாம் சரி செய்து பிறகு கடன் தள்ளுபடி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் பயிர்க்கடனில் பல முறைகேடுகள் உள்ளன. அவை ஆதாரத்துடன் மானியக்கோரிக்கை விவாதத்தில் எடுத்துரைக்கப்படும்’.

இவ்வாறு காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றன.