சென்னை: தகுதி வாய்ந்த அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தின்போது, அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை இரங்கல் தீர்மானம் வாசித்து முடிந்ததம் பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொதுவிவாதம் தொடங்கியது.  முதலாவதாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். அவரது பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பதில் தெரிவித்தனர்.

தொடர்ந்து, பட்ஜெட் மீதான பொதுவிவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி,’ நிலம் இல்லாதவர்கள் எத்தனை பேருக்கு 2 ஏக்கர் நிலம் கொடுத்தீர்கள் ?. அங்கொன்றும் இங்கொன்றும் நிலம் கொடுத்தீர்கள், முழுமையாக கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

அதற்கு பதில் அளித்த  கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, 2.5 லட்சம் ஏக்கர் நிலங்களை ஏழை எளிய மக்களுக்கு பிரித்துக் கொடுத்தது திமுக அரசு என்றார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி,’அனைத்து இல்லத்தரசிகளுக்கும் 1000 ரூபாய் என வாக்குறுதி கொடுத்தீர்கள் ஆனால் தற்போது ஏழ்மையான குடும்பத்திற்கு மட்டும் என சொல்றீங்க’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ஏழ்மையான குடும்பங்களுக்கு மட்டுமல்லாமல் தகுதி வாய்ந்த அனைத்து இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்றும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் கண்டிப்பாக செயல்படுத்துவார் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.