டெல்லி: பேரறிவாளன் விஷயத்தில் மத்தியஅரசு முடிவு எடுக்காவிட்டால், நாங்கள் முடிவு எடுக்க வேண்யதிருக்கும் என கறாராக கூறிய உச்சநீதிமன்றம், ஆளுநர் அதிகாரம் குறித்தும் நாங்கள் முடிவெடுக்க போகிறோம் என்று தெரிவித்து உள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு பல கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இறுதிக்கட்ட விசாரணைக்கு வந்ததுள்ளது. இன்றைய விசாரணையின்போது, காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் மத்திய அரசு சரமாரியாக கேள்விக்கணைகளை வீசினர்.

இன்றைய விசாரணையின்போது, இந்த வழக்கில் மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதிகள்,  மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லையென்று மத்திய அரசு சொன்னால், உடனடியாக பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம் என்று கூறினர். மேலும், பேரறிவாளன் விவகாரத்தில் பல இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறோமே? அதன் நிலை என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்ந்து, பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக இதுவரை ஏன் முடிவெடுக்கவில்லை? என்றும், பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுக்க கால தாமதம் ஏன் என்றும்? சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளனர் நீதிபதிகள்.  பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுக்க வில்லை என்றால் அரசியல் சாசனம், உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும் என்றார்.

பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஆளுநர் மட்டுமே முடிவெடுக்க வேண்டிய நிலையில், தேவையில்லாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறார்கள் என்று தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார்.

ஆளுநருக்கு எதிராக வாதிட முடியாது என்று மத்திய அரசின் வழக்குரைஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.  இதையடுத்து பேசிய நீதிபதிகள், பேரறிவாளனை விடுவிக்க வேண்டிய விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். அமைச்சரவை முடிவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தால் கூட்டாட்சிக்கான அர்த்தம் என்ன?  இதில் மத்திய அரசு ஏன் தலையிடுகிறது? என்று உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் கேள்வி எழுப்பினார்.

அமைச்சரவை முடிவு, தீர்மானங்கள் சட்ட சிக்கல்கள் நிறைந்ததாக இருந்தால் அதன் மீது முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்ப முடியும், அதற்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு வழக்கறிஞர் கூறினார்.

இதுகுறித்து பேசிய நீதிபதிகள்,  அரசமைப்புச் சட்டம், கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றுடன் தொடர்புடைய அதிமுக்கிய விஷயமாக இந்த வழக்கை கருகிறோம் என்று கூறிய நீதிபதிகள், ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டியதுதானே என்றும் நீதிபதிகள் மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், அமைச்சரவை முடிவு எடுத்த விவகாரத்தில், ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய அவசியமே இல்லை என்றும், இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் குறித்து முடிவெடுக்க போகிறோம் என்று கூறிய நீதிபதிகள் அரசியல்சாசனம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின்படி, பேரறிவாளன் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று கூறிய நீதிபதிகள், விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.