சென்னை: பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் பேச்சுகள், வன்முறை மற்றும் ஆபாச உரைகள் நிறைந்து காணப்படும் இந்துத்துவக் கூட்டங்களுக்கு தடைவிதிக்க வேண்டுமென காவல்துறைக்கு தொடர்ந்து மனு அளித்து நெருக்கடி அளிக்க வேண்டுமென சக முற்போக்கு இயக்கங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சாதாரண வெகுஜன மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் மற்றும் கருத்து தெரிவிக்கும் நம்மைப் போன்றவர்கள் மீது வலியவந்த ஒருசார்பாக நடவடிக்கை எடுக்கின்றன காவல்துறை மற்றும் நீதித்துறை அமைப்புகள்.

ஆனால், நீதிமன்றத்தை பொதுவெளியில் மிக இழிவாகப் பேசியவர்கள் மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றும் பெண்களைப் பற்றி மிகவும் தரக்குறைவாகப் பேசியவர்கள் மீது இன்னும் முறையான நடவடிக்கைகள் இல்லை. அவர்கள் எந்த அச்சமுமின்றி சுதந்திரமாக நடமாடுகிறார்கள். பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கூறியதற்கும் எந்த நடவடிக்கையும் இல்லை.

ஆனால், மக்களுக்காக போராடும் நம் போன்ற இயக்கங்களின் மீது, புகார்களை வலியப் பெற்று நடவடிக்கை எடுக்கிறார்கள் மற்றும் கைது செய்கிறார்கள். நாம் நடத்தும் கூட்டங்களை தடைசெய்ய வேண்டுமென இந்துத்துவ அமைப்புகள் காவல்துறையில் மனு அளிக்கிறார்கள். இதனால், அதையே காரணம் காட்டி நமது கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கிறார்கள் காவல் துறையினர்.

ஆனால், வன்முறை மற்றும் ஆபாச உரைகள் நிறைந்த இந்துத்துவ இயக்கங்களின் கூட்டங்களுக்கு தடைகோரி நாம் காவல்துறையில் மனு அளிப்பதில்லை. நாம் அவர்களுடைய கூட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் தடைகோரி மனு அளித்து காவல்துறைக்கு நெருக்கடி தர வேண்டும். மேலும், இந்துத்துவ கூட்டங்களுக்கு சென்று, அவர்களின் பேச்சுக்களை வீடியோவாக பதிவுசெய்து அதை நீதிமன்றங்களில் ஆதாரங்களாக சமர்ப்பிக்க வேண்டும்.

இதன் முக்கியத்துவத்தை தோழர்கள் உணர்ந்துகொண்டு பிறருக்கும் இதைத் தெரிவித்து விழிப்புணர்வு அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் கொளத்தூர் மணி.