வேலூர்: பிரதமர் நரேந்திர மோடி நினைத்தால் தமிழக அரசு கவிழும் என்று பேசி திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து சில நாட்களாக ஸ்டாலின் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதேசமயம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த இருவரும் அவ்வப்போது ஏதேனும் கூறி பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள். அந்தவகையில், தற்போது ‘பிரதமர் மோடி நினைத்தால் தமிழகத்தில் அதிமுக அரசு கவிழும்’ என்று ஸ்டாலின் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலின் கூறியுள்ளதாவது, “இன்னும் ஒரு மாதம் பொறுத்திருந்து பாருங்கள், இந்த ஆட்சிக்கு என்ன நேரும் என்று! இந்த ஆட்சியை இப்போது நினைத்தாலும் கவிழ்க்க முடியும். கர்நாடகாவில் ஆட்சி கலையவில்லையா? எனவே, பிரதமர் மோடி நினைத்தால் இந்த ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும்” என்று பேசியுள்ளார் ஸ்டாலின்.

நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதாவுடன், திமுக சுமூகப் போக்கை கடைபிடிக்கிறது என்று கூறப்பட்டு வரும் நிலையில், ஸ்டாலினின் இந்தப் பேச்சு வைரலாகியுள்ளது.