சென்னை,

ருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  ஜெயலலிதாவை நான் உள்பட சக அமைச்சர்கள் பார்த்தோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறி உள்ளார். இது மேலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட மோதல் காரணமாக எடப்பாடி தலைமையிலான அரசுக்கு எதிராக சசிகலா தரப்பினர் டிடிவி தினகரன் தலைமையில் தனி ஆவர்த்தனம் செய்து வருகின்ற னர். அவர்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜெயலலிதா சிகிச்சை சந்தேகம் குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கே..சி.வீரமணி போன்றோர் சசிகலாவுக்கு பயந்தே, மருத்துவமனையில் ஜெயலிதாவை பார்த்ததாகவும், அவர் இட்லி சாப்பிட்டார் என்று பொய் சொன்னோம் என்று கூறி உள்ளனர்.

அதேவேளையில் ஜெ.அண்ணன் மகனான தீபக், ஜெயலலிதா 3 நாட்கள் மட்டுமே சுய நினைவோடு இருந்தார் என்று கூறி இருக்கிறார்.

இந்நிலையில்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் சந்தித்தோம் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறி உள்ளார்.

தமிழக அமைச்சர்களின் தான்தோன்றித்தனமான பேச்சு தமிழக மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.சி. வீரமணி சொல்றது பொய்யா? அல்லது தெர்மோகோல் அமைச்சர் செல்லூர் ராஜு சொல்வது பொய்யா? என்பது குறித்து விரிவாக விசாரணை செய்ய வேண்டியது அரசின் கடமை.

ஜெ. மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தெரிவித்த முதல்வர், அதைத் தொடர்ந்த நேற்று ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தமிழக அமைச்சர்கள் வெவ்வேறு கருத்துகள் கூறியுள்ளது தமிழக அரசியலில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.