ஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் சீட் பெல்ட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக ஒரு வாலிபரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் போலீசார் ஹெல்மெட் அணியாதவர்கள், குடிபோதையில் வண்டி ஓட்டுபவர்கள், லைசென்சு இல்லாதவர்கள் ஆகியோரை பிடிக்க வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.  அத்துடன் கார்களில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டுபவர்களுக்கும், அளவுக்கு அதிகமாக எடை கொண்ட பொருட்களை ஏற்றி வருவோரையும் சோதனை செய்கின்றனர்.  இவர்களுக்கு ஸ்பாட் ஃபைன் எனப்படும் அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படுகிறது.

 

              பாண்டியராஜன்

தஞ்சையை அடுத்த வெங்குராயன் குடிக்காடு என்னும் ஊரை சேர்ந்த பாண்டியராஜன் என்னும் 29 வயது இளைஞரிடம் இரு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் வந்ததாக ரூ. 500 வசூலித்துள்ளனர்.  இது குறித்து அவர் தஞ்சாவூர் ஆட்சியாளர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், “நான் விவசாயக் கூலியாக பணி புரிகிறேன்.  தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் சாலையில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கிக்கு என் மோட்டார் சைக்கிளில் சென்றேன்.  அப்போது என்னை வாகன சோதனை செய்துக் கொண்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.  என்னிடம் அனைத்து ஆவணங்களையும் உடன் வைத்திருந்தேன்.  தவிர நான் அப்போது ஹெல்மெட்டும் அணிந்திருந்தேன்.

போலீசார் என்னிடம் சீட் பெல்ட் அணியாததற்காக அபராதம் விதித்தனர்.  நீதிமன்றம் சென்றால் ரூ.2500 ஆகும்,  ஆனால் இங்கேயே செலுத்தினால் ரூ. 500 தான் என தெரிவித்து மோட்டார் சைக்கிள் சாவியை அவர்களே எடுத்துக் கொண்டனர்.  நான் பலமுறை கெஞ்சியும் கேட்காததால் நான் ரூ.500 செலுத்தி மோட்டார் சைக்கிளை எடுத்து வந்தேன்.  எனக்கு ரசீது ஏதும் தரவில்லை.  இது போல அதிகாரத்தைக் காட்டி பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் போலீசார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை பாண்டியராஜன் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியான சக்திவேலிடம் கொடுத்தார்.  அவர் இது குறித்து விசாரணை செய்யுமாறு தஞ்சை மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி செந்தில்குமாருக்கு இந்த புகார் மனுவை அனுப்பி உள்ளார்.