புதுடெல்லி: முழுமையாக தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட ஒருவர், அடுத்த 12 மாதங்களுக்குள், 3வது டோஸ் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையிருக்கலாம் என்று பேசியுள்ளார் Pfizer நிறுவன முதன்மை செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா.

இக்கருத்தை, போர்லா, ஏப்ரல் 1ம் தேதியே கூறியிருந்தாலும், அது ஏப்ரல் 15ம் தேதிதான் வெளியாகியுள்ளது. மேலும், மக்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை ஆண்டுதோறும் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையும் ஏற்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

“கொரோனா தாக்குதலுக்கு எளிதில் ஆளாகக்கூடிய மக்கள் திரளை, மீண்டும் மீண்டும் சிரமத்திற்கு ஆளாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தன்மை மாறக்கூடிய கொரோனா வைரஸ் போன்றவைகளை எதிர்கொள்ள, தடுப்பூசிகள் முக்கியமானவை” என்று அவர் மேலும் கூறினார்.

கொரோனா தடுப்பூசிகளை ஒரு சமயத்தில் முழுமையாக போட்டுக்கொண்டவர்களுக்கு, எவ்வளவு நாட்கள் தாங்குதிறம் கிடைக்கும் என்பது குறித்து, தற்போதைய நிலையில், ஆராய்ச்சியாளர்களால் ஒரு முடிவிற்கு வர இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Pfizer சிஇஓ கூறிய கருத்தையே, ஜான்சன் & ஜான்சன் நிறுவன முதன்மை செயல் அதிகாரியும் கூறியிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. அதாவது, கொரோனா தடுப்பூசியை, அனைத்து சீசன்களிலும் ஒரு தடுப்பாக எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை வரும் என்று அவர் தெரிவித்திருந்தார்.