சென்னை: நமது நாட்டுக்கு 117 கோடி டோஸ் தடுப்பூசி தேவைப்படும்போது, வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதா என மா.சுப்பிரமணியன் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 81,85,13,827 (81 கோடி) பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 96,46,778  பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  மன்சுக் மாண்டவியா,  மேலும் தடுப்பூசிகள் வர இருப்பதாகவும், அக்டோபர் மாதத்தில் 30 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வருகிறது, தொடர்ந்து, அடுத்த 3 மாதங்களில் சுமார்  100 கோடி டோஸ்கள் கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார்.
நமது நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் நமது நாட்டு மக்களுக்குத்தான் முன்னுரிமை, என்று கூறியவர்,  மேலும் கோவாக்ஸ் திட்டத்தின்படி, உபரி தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும்  உள்ள மக்களுக்கு இன்னும்  117 கோடி டோஸ்கள் தேவைகள் உள்ளது. அப்படி இருக்கும்போது, தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது, , ஏற்றுமதியை ஒதுக்கி வைத்து, நாட்டின் சொந்த மக்களுக்கு 100 % வாக்ஸ் கவரேஜை உறுதி செய்யுங்கள் என்று  மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளார்.

ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசிகள் சென்றடையும் வகையில், உலக சுகாதார அமைப்பின் தலைமையில் கோவாக்ஸ் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் உலகின் முன்னணி தொழில்துறை ஜி 7 நாடுகள் குழு, ஏழை நாடுகளுக்கு ஒரு பில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ்களை வழங்குவதாக ஏற்கனவே உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.