மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பாஜக, சிவசேனா கூட்டணி கட்சிகளுக்கு இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், நாங்கள் யார் என்பதை, சட்டமன்றத்தில் நடைபெறும் ஃபுளோர் டெஸ்டின்போது (பெரும்பான்மை நிரூபிக்கும் வாக்கெடுப்பு) நிரூபிப்போம் என்று சிவசேனா எம்பி. சஞ்சய் ரவுத், பாஜகவுக்கு சவால் விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 8ந்தேதிக்குள் புதிய சட்டமன்றம் பதவி ஏற்க வேண்டிய சூழலில், பாஜக, சிவசேனா இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதல் காரணமாக, ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், சிவசேனாவின் முதல்வர் பதவி கோரிக்கையை ஏற்க மறுத்த பாஜக, சிவசேனா எம்எல்ஏக்களை விலைபேசி வருகிறது. அந்த நம்பிக்கையில், இன்று மாலை மாநில கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத், எங்களிடம், சொந்த முதலமைச் சரை உருவாக்குவதற்கான உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. அதை நாங்கள்  இங்கே காட்ட வேண்டிய அவசிய மில்லை, அதை சட்டமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்பின்போது நிரூபிப்போம்… எங்களுக்கு மாற்று வழிகள் உள்ளன, விருப்பங்களும் மாற்றுகளும் இல்லாமல் நாங்கள் பேசுவதில்லை என்று அதிரடியாக தெரிவித்து உள்ளார்.

மேலும், பாஜகவிடம், ஆட்சி அமைக்க தேவையான உறுப்பினர்களின் ஆதரவு இல்லையென்றால், அதை ஒப்புக் கொள்ளவேண்டியதுதானே என்று கேள்வி விடுத்தவர்,  அரசியலமைப்பு என்பது இந்த நாட்டின் மக்களுக்கானது, அது அவர்களின் (பிஜேபியின்) தனிப்பட்ட சொத்து அல்ல. எங்களுக்கு அரசியலமைப்பை நன்கு தெரியும். அரசியலமைப்பு ரீதியாக மகாராஷ்டிராவில் சிவசேனா முதல்வரை உருவாக்குவோம் என்றும் பாஜகவுக்கு சவால் விட்டுள்ளார்.

இதற்கிடையில்,  அடுத்த உத்தரவு வரும் வரை அனைத்து சிவசேனா எம்.எல்.ஏக்களும்  பாந்த்ராவில் (மேற்கு) உள்ள ரங் ஷரதா ஹோட்டலில் தங்குமாறு  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கூறிய சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சத்தர் கூறுகையில், அனைத்து எம்.எல்.ஏ.க்களை யும் சிறிது நேரம் ஹோட்டலில் தங்குமாறு உத்தவ் தாக்கரே கேட்டுக் கொண்டார் என்று கூறி உள்ளார்.