சென்னை:

ரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு காரணமாக டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரனுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் அந்தர் பல்டி அடித்துள்ளார்.

இரட்டை இலையை தங்களது அணிக்கு ஒதுக்க கோரி, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் டில்லி போலீசாரால் 3 நாட்கள் விசாரணைக்கு பிறகு நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

இன்று பிற்பகல் டில்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் வரை அவர்களுடனேயே இருந்த தமிழக அமைச்சர்கள் தற்போது அவர் யாரென்றே தெரியாது என்பதுபோல் பேசி வருகிறார்கள்.

டிடிவி தினகரன் கைது குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் சிவி சண்முகத்திடம் கருத்து கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர்,  கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அந்தர்பல்டி அடித்தார். அதேபோல் சசிகலா பேனர் அகற்றப்பட்டதற்கும், தினகரன் கைதுக்கும் தொடர்பில்லை எனவும் ,  தினகரனை ஏற்கனவே ஒதுக்கி வைத்துவிட்டோம் என்று கூறினார்.

தினகரன் மீதான வழக்கை அவர் சட்டப்படி சந்திப்பார் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அமைச்சர் சண்முகத்தின் பேச்சு, குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பது போலவே இருப்பதாக செய்தியாளர்கள் முனுமுனுத்தனர்.