சென்னை:
ந்தியாவுக்கே முன்மாதிரியாக தமிழகத்தை மாற்றியுள்ளோம் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 75- வது சுதந்திரதினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் சென்னையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 9 மணிக்கு முதல்முறையாக தேசியக் கொடியேற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றினார்.

பின்னர் பேசிய அவர், நாட்டின் சுதந்திர தினத்தன்று இந்தியா முழுவதும் உள்ள முதலமைச்சர்கள் கொடியேற்றும் வாய்ப்பை, உரிமையை பெற்றுத் தந்தவர் கலைஞர் என்று தெரிவித்தார்.

75வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் தமிழக அரசால் மிகப்பெரிய நிணைவுத்தூண் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூபாய் 17 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியத் தொகை 8 ,500 லிருந்து 9 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சராக நான் பொறுப்பு ஏற்றதில் இருந்து 101வது நாள் இன்று. நிதிச்சுமையோடு, கொரோனா நெருக்கடியான கால சூழலில் பதவியேற்று பல்வேறு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அதில் வெற்றியும் கண்டு இருக்கின்றோம் என்று தெரிவித்த அவர், சாதி, மதம், இனம் குறித்த பல்வேறு சவால்களை எதிர் கொண்டிருக்கும் இந்திய திருநாட்டை வழிநடத்த காந்திய சிந்தனைகள் எனும் கருத்தை இளைஞர் மனதில் ஆழப் பதிய வைக்க சூளுரைப்போம்”, என்றார்.