கதிராமங்கலம்,
எங்கள் பிரச்னைகளுக்காக வராத அரசு எங்களுக்கு தேவையில்லை என கதிராமங்கலம் மக்கள் தமிழக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
கடந்த 30-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் குழாயில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. ஏற்கனவே, இந்த திட்டத்தை எதிர்த்து வரும் நிலையில் எண்ணை கசிவு காரணமாக பதற்றம் அடைந்த அந்த ஊர் மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.
தகவலறிந்து வந்த போலீஸார், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கலைத்ததால், அந்த பகுதி கலவர பூமியாக மாறியது. அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட 9 பேர் மீது, வழக்குப் பதிவு செய்து அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஓஎன்ஜிசி எண்ணை கிணறுகளால், அந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீரில் எண்ணெய் கலப்பு உள்ளதால் மக்கள் குடிநீருக்காக பரிதவிக்கிற்ர்கள்.
இந்நிலையில், கதிராமங்கலத்தில் போலீசாரின் அடக்குமுறைக்கு எதிராக பள்ளி மாணவர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினர்.
கதிராமங்கலம் பகுதிக்கு வெளியூரில் இருந்து யாரும் வராதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போலீசாரின் அடக்குமுறை பிடியில் சிக்கி கதறுகிறது கதிராமங்கலம் கிராமம்.
இந்நிலையில் கதிராமங்கலத்தில் தஞ்சாவூர் ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித் அவர், கதிராமங்கலம் கிராம மக்களுடன் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறினார்.
மேலும் கிராம மக்கள் தெரிவிக்கும் கருத்தை ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் தெரிவிக்கப்படும் என்று கூறி உள்ளார்.
மேலும், மக்களின் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்படும். பொதுமக்கள் அச்சமின்றி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக 2 ஆழ்துழை கிணறுகள் அமைக்கபடும். எண்ணெய் கசிவு ஏற்பட்ட குழாய்கள் சரிசெய்யப்பட்டுள்ளதால் பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை. இயல்பு நிலை திரும்பியுள்ளதால் 90 சதவீதம் போலீசார் திரும்பப் பெறப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த பகுதி மக்கள் இன்னும் போலீசாரின் அடாவடி அடக்குமுறைகள் தொடர்வதாக கூறி உள்ளனர். மேலும், எங்கள் பிரச்சினைக்கு வராத அரசு எங்களுக்கு தேவையில்லை என்றும் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட கதிராமங்கலம் போராட்டக்குழுவினர் திருச்சி மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.