சிலை கடத்தல் வழக்கில் எங்களுக்கு தொடர்பில்லை: இரு அமைச்சர்கள் பதற்றத்துடன் பேட்டி

Must read

சிலை கடத்தல் வழக்கிற்கும், தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசனும், சேவூர் ராமச்சந்திரனும் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

சிலை கடத்தல்கள் தொடர்பாக விசாரிக்கும் பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொன் மாணிக்கவேல், “சிலை கடத்தல் வழக்கில் 2 அமைச்சர்களுக்கு தொடர்புள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பான ஆதாரங்களுடன் ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கி இருந்தது.

அதேநேரம் இன்று காலை தனியார் தொலைக்காட்சி ஒன்றில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டன. விசாரணை அதிகாரி தரப்பில் எவ்வித ஆவணமும் சமர்பிக்கப்படாத நிலையில் இச்செய்தி வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இத்தகைய சூழலில், ஆம்பூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.சி சண்முகத்திற்கு வாக்கு சேரித்து முடித்த பின்னர் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், “பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் யார் பெயரையும் குறிப்பிடாத நிலையில் எங்களுக்கு எதிராக திட்டமிட்டு பொய் செய்தியை தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த 2 அமைச்சர்கள் நாங்கள் என்பது முற்றிலும் பொய்யானது. செய்தியை வெளியிட்ட அந்த நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

More articles

Latest article