ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் ஆக.4ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஆடிப்பூர கொட்டகையில் 5 ஆயிரம் பேர் அமரும் வகையில் அலங்கார பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் பிறந்த தினமான ஆடிப்பூரத்தில் (ஆக. 4), ஆண்டாள் கோயில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான விழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று முதல் தினசரி ஆண்டாள் கோயில் முன்புள்ள ஆடிப்பூர கொட்டகையில் பக்தி சொற்பொழிவு, மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சி நடைபெறும்.இதனையொட்டி ஆடிப்பூர கொட்டகையில், 5 ஆயிரம் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரமாண்ட அலங்கார பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வண்ண, வண்ண துணிகளால் பந்தலில் உள்அலங்கார பணி நடந்து வருகிறது. இப்பணியில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாக அதிகாரி இளங்கோவன் செய்து வருகின்றனர்.ரத வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்தேரோட்டத்தையொட்டி தேர் வரும் நான்கு ரத வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் கிருஷ்ணவேணி, தேசிய நெடுஞ்சாலை அதிகாரி ஆனந்தகுமார், மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரி விசாலாட்சி மற்றும் நகராட்சி கமிஷனர் மாணிக்க அரசி ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனையொட்டி, நகர் இன்ஸ்பெக்டர் பவுல் யேசுதாஸ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.