இந்திய நீதிமன்றங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித்துள்ளார்.
“சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பது எந்தவொரு ஜனநாயக நாட்டின் அடிப்படையாகும், மேலும், இந்திய நீதிமன்றங்களில் காந்தி (ராகுல் காந்தி) வழக்கை நாங்கள் கவனித்து வருகிறோம்,” என்று ராகுல் காந்தி எம்.பி. பதவியில் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான செய்தியாளர் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
“கருத்து சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக கோட்பாடுகளை உறுதி செய்வதில் இந்திய அரசுடன் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது”
மேலும், “ஜனநாயகக் கொள்கைகளின் முக்கியத்துவத்தையும், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளைப் பாதுகாப்பதையும் இருநாடுகளின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான திறவுகோலாகத் தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறோம்” என்று வேதாந்த் படேல் கூறினார்.
இந்தியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறதா அல்லது ராகுல் காந்தியுடன் தொடர்பு கொள்கிறதா என்று கேட்டபோது, “என்னிடம் எந்த குறிப்பிட்ட தகவலும் இல்லை… இருந்தபோதும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் அதன் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் அமெரிக்கா தொடர்பு வைத்துள்ளது. ஆனால் உங்கள் கேள்விக்கான உறுதியான தகவல் எதுவும் என்னிடத்தில் இல்லை” என்று விளக்கமளித்தார்.