கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் நடைபெறும் திருவிழாவில் ஆண்கள் பெண்களைப் போல் உடையணிந்து அலங்காரம் செய்து வழிபடும் வினோதம் நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சமயவிளக்கு திருவிழா இந்த ஆண்டு மார்ச் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற்றது.

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் நடைபெறும் சமயவிளக்கு திருவிழா தனித்துவமான திருவிழாவாகவும், உலகில் வேறு எந்த கோவிலிலும் இல்லாத வினோத நடைமுறையுடன் கூடிய திருவிழாவாகவும் உள்ளது.

கோயிலின் முதன்மை தெய்வம் வனதுர்கா என்றும் அழைக்கப்படும் துர்கா தேவி என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு ஆண்கள் தங்கள் மீசை தாடியை மழித்துவிட்டு பெண்களைப் போல் பாரம்பரிய ஆடை மற்றும் வளையல் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை அணிந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

வெள்ளிக்கிழமை தொடங்கிய இரண்டு நாள் ஆண்டு விழா பாரம்பரிய சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகளுக்குப் பிறகு சனிக்கிழமை இரவு நிறைவடைந்தது.

ஆயிரக்கணக்கான ஆண்கள் வேலை, செல்வம் ஆகியவற்றை வேண்டி பெண்களைப் போல அலங்காரம் செய்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

தாவணி, கசவு புடவைகள் மற்றும் சுரிதார்களை உடுத்தி, நகைகளையும் அணிந்து கோவில் வளாகத்தை சுற்றிவந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

ஊர்வலத்தின் போதும், பிரார்த்தனை செய்யும்போதும் ஆண்கள் சமயவிளக்கு (ஐந்து திரிகள் கொண்ட விளக்கு) எடுத்துச் செல்கிறார்கள்.

வரலாறு

உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளின்படி, ஒருமுறை மாடு மேய்க்கும் சிறுவர்கள் காடுகளில் கிடைத்த கல்லில் தேங்காய் உடைக்க முயன்றனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியாக, கல்லில் இருந்து ரத்தத் துளிகள் வழிவதைக் கண்டனர்.

அவர்கள் அச்சமடைந்து கிராம மக்களுக்கு தங்களின் அனுபவத்தை தெரிவித்தனர்.

பின்னர், உள்ளூர்வாசிகள் ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்டனர், அவர்கள் கல்லில் வனதுர்காவின் அமானுஷ்ய சக்திகள் இருப்பதாகவும், கோயில் கட்டிய உடனேயே பூஜைகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் கூறினர்.

எனவே, தென்னை மரத்தின் தூண்கள், இலைகள் மற்றும் இளஞ்சிவப்பு இலைகளைப் பயன்படுத்தி கல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டினார்கள்.

அந்த நாட்களில் இளம் பெண்கள் மட்டுமே சிறிய மற்றும் குடும்ப வழிபாட்டுத் தலங்களில் மலர் மாலைகளைத் தயாரிக்கவும், விளக்குகளை ஏற்றவும் அனுமதிக்கப்பட்டதால், பெண்கள் மற்றும் பெண்களைப் போல உடை அணிந்தவர்கள் மட்டுமே கோயிலில் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்.

இதன் தொடர்ச்சியாக ஆண்கள் பெண்களைப் போல் உடையணிந்து வழிபட தொடங்கினர் என்று கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இந்த சமயவிளக்கு திருவிழாவில் கலந்து கொள்ளும் ஆண்களில் பெண்களைப் போல் சிறப்பாக ஆடை அலங்காரம் செய்து வருபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது.