புத்த மதத்தின் 3வது பெரிய தலைவராக 8 வயதே ஆன அமெரிக்க வாழ் மங்கோலிய சிறுவனை தலாய்லாமா தேர்ந்தெடுத்துள்ளார்.

புத்த மத தலைவரை நியமிக்கும் உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டு என்று சீனா கூறிவரும் நிலையில் தலாய்லாமா-வின் இந்த அறிவிப்பு சீனாவை சீண்டுவதாக கருதப்படுகிறது.

புத்த மதத்தின் 3வது பெரிய தலைவர் என்றபோதும் மங்கோலியவின் தலாய்லாமா-வுக்கு நிகரான மதத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது தான் உண்மை என்று கூறப்படுகிறது.

அமெரிக்க மங்கோலியன் குழந்தைகளான அகுய்டாய் மற்றும் அசில்தாய் அல்டனார் என்ற இரட்டையர்களில் ஒருவரான அந்த சிறுவனை மதத்தலைவராக தேர்ந்தெடுத்தபின் 10வது கல்க்ஹா ஜெட்சன் தம்பா ரின்போசே என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இவரது தந்தை அல்டனார் சின்ச்சுலூன் எனவும், தாயார் மங்க்னசன் நர்மதனாக் என தெரியவந்துள்ளது. தந்தை அல்டனார் சின்ச்சுலூன் அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது பாட்டி, மங்கோலியா பார்லிமென்டில் எம்.பி., ஆக இருந்துள்ளார்.

2015 இல் அமெரிக்காவில் பிறந்த இந்த சிறுவன் மங்கோலியா மற்றும் அமெரிக்காவின் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளார்.

திபெத்-தைச் சேர்ந்த புத்த மதகுருவான தலாய் லாமாவை சீனா எதிரியாக கருதிவரும் நிலையில் அவர் இந்தியாவில் வாழ்ந்துவருகிறார்.

87 வயதான தலாய்லாமா இந்த மாதம் 8 ம் தேதி இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது அந்த சிறுவனை மதத்தலைவராக அறிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து மங்கோலியாவின் மதத்தலைவர் என்ற பட்டத்தை தலாய் லாமா அந்த சிறுவனுக்கு வழங்கியதை திபெத்திய அரசாங்கத்தின் முன்னாள் பிரதமர் சாம்டாங் ரின்போச்சே உறுதி செய்தார்.

தங்களது நாட்டை சேர்ந்த சிறுவன் புத்தமதத்தின் 3வது பெரிய தலைவராக நியமிக்கப்பட்டதை அறிந்த உடன் மங்கோலிய மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தலாய் லாமா மற்றும் புத்த மதகுருவை நியமிக்கும் உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டு என்று கூறிவரும் சீனாவுக்கு தலாய் லாமாவின் இந்த அறிவிப்பு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனால் சீனாவின் கோபம் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.