சென்னை:
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குதர அவசரச் சட்டம் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்துள்ளார் .ப.சிதம்பரத்தின் மனைவியான மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம்
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர நீட் நுழைவு தேர்வு இந்த ஆண்டு முதல் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
நீட் தேர்வு நடத்தப்படுவதால், சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டும் பயன் பெறுவார்கள். கிராமப்புற மாணவர்களுக்கு எந்த பலனும் இல்லை. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக மாணவர்கள் மருத்துவக்கல்லூரி இடங்களை பெறும் வகையில், மருத்துவ கல்வியில் 85சதவிகித உள்ஓதுக்கீடு வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
இதை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த வழக்கு காரணமாக, தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழக அரசு மத்திய அரசை வலி யுறுத்தி வருகிறது. இதன் காரணமாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக டில்லியில் முகாமிட்டு மத்திய அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தி வந்தனர்.
தமிழகத்திற்கு இந்த ஆண்டு விலக்கு கோரி முதல்வர் எடப்பாடியும், பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார்.
இதையடுத்து, நேற்று சென்னை வந்திருந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்தி யாளர்களிடம் பேசும்போது, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, தமிழக கிராமப்புற மாணவர்கள் நலன்கருதி இந்த ஒரு ஆண்டு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கு, தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தால், மத்திய அரசு உதவி செய்யும் என்று கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு சுறுசுறுப்பாக செயல்பட்டு, அவசர ஆலோசனை நடத்தி விலக்குக்கான சட்டமுன்வடிவை இன்று காலை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
இந்நிலையில், நீட் விலக்கு கோரியுள்ள தமிழக கல்வி பாடத்திட்ட மாணவர்களுக்கு எதிராக, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆதரவாக வாதாடி வரும், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்,
நீட் தேர்வில் இருந்து விலக்கு கொடுக்கப்பட்டால் அதை எதிர்த்து வழக்கு தொடருவேன் என்றும் கூறி உள்ளார்.
நீட் தேர்வுக்கு, தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. இதை செயல்படுத்தினால், சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்.
கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக அவசர சட்டம் கொண்டு வருவதாக அரசு கூறுவது பொய்யான தகவல். தமிழக அரசின் இந்த அவசர சட்டத்தால், கிராமப்புற மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை. இந்த அவசர சட்டம், சட்ட விரோதமானது.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகத்தை சேர்ந்த ஒருவரே தமிழக மாணவர்களுக்கு எதிராக வழக்கு போடுவேன் என்று கூறியிருப்பது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனது மனைவியின் இந்த அறிவிப்பை, ப.சிதம்பரம் ரசித்துக்கொண்டிருக்கிறாரா? என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.