சென்னை
சென்னை பல்கலைக்கழகம் பட்டப்படிப்பையும், பட்டமேற்படிப்பையும் முடிக்க படிப்புக்காலம் முடிந்து இரண்டாண்டுகள் காலக்கெடு விதித்துள்ளது.
தற்போதுள்ள பல்கலைக்கழக விதிகளின் படி, பட்டப்படிப்பையும், பட்ட மேற்படிப்பையும் முடிக்க காலக்கெடு எதுவும் இல்லை. இனி அது நடக்காது. அனைத்து படிப்பையும் படிப்புக்காலம் முடிந்து இரண்டாண்டு காலங்களுக்குள் முடித்தாக வேண்டும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது பற்றி கூறப்படுவதாவது :
மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பை அந்த மூன்றாண்டுகள் முடிந்த பின் மேற்கொண்டு இரண்டாண்டுகளில் முடித்தாக வேண்டும். அதே போல இரண்டாண்டு பட்டமேற்படிப்பை அது முடிந்த பின் இரண்டாண்டுகளில் முடித்தாக வேண்டும் அதிகபட்ச காலக்கெடு பட்டப்படிப்புக்கு ஐந்தாண்டுகளும், பட்டமேற்படிப்புக்கு நான்காண்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்கள் இருப்பின் மேலும் ஓராண்டு படிப்பை தொடர அனுமதி அளிக்கப்படும். இது சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் வரும் அனைத்து கல்லூரிகளுக்கும் அனைத்து படிப்புகளுக்கும் பொருந்தும்.
பலகலைக்கழகம் எம். ஃபில் மற்றும் பி எச் டி கல்விக்கும் விதிமுறைகளை மாற்றியுள்ளது. ஒரு பேராசிரியர் அதிக பட்சம், எட்டு மாணவர்களுக்கு மட்டுமே வழிகாட்டியாக செயல்படவேண்டும். அதே போல இணை பேராசிரியர்களுக்கு ஆறு மாணவர்களும், துணை பேராசிரியர்களுக்கு நான்கு மாணவர்களும் மட்டுமே அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது புதிதாக பணிக்கு வரும் துணை பேராசிரியரும் 10 மாணவருக்கு மேல் வழிகாட்டியாக இருப்பதால் ஆய்வுத் தரம் குறைகிறது அதை தடுக்கவே இந்த விதிமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் இருந்து ஒரு வருடத்துக்கு பல்கலைக்கழகம் துவங்கி 160 வருடம் ஆனதற்கான கொண்டாட்டங்கள் நடைபெறும். இதற்காக பல கல்வி, மற்றும் கலாசார நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மாணவர்களைக் கவரும் வண்ணம், தற்போதைய பட்டப்படிப்புக்களை மாற்றி அமைக்கவும், புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.