கோவை,
சசிகலா அணியில் இருக்கும் 122 எம்எல்ஏக்களும் கொத்தடிமைகள்தான் என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார் எடப்பாடி அணியைசேர்ந்த எம்எல்ஏ கனகராஜ்.
இது அதிமுகவின் எடப்பாடி அணி எம்எல்ஏக்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெ.மறைவை தொடர்ந்து, அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தால், முதல்வராக இருந்த ஒபிஎஸ் தனியாக சென்று சசிகலாவுக்கு எதிராக களமிறங்கினார். அதைத்தொடர்ந்து ஜெ.வின் தோழி சசிகலா அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தன்னை பதவி ஏற்க அழைப்பு விடுக்குமாறு கவர்னரை சந்தித்தார்.
அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் கூவத்தூர் அழைத்துச்சென்று சொகுசு விடுதியில் தங்க வைத்து, பட்டையை கொடுத்து மட்டையாக்கி வைத்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்தது. அதன் காரணமாக அவர் பெங்களுர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில், அவரது பினாமியாக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்வு செய்து, அதன்படி அவர் முதல்வராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், கூவத்தூரில் தங்கியிருந்து சசிகலா அணிக்கு ஆதரவாக இருந்து வந்த கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் அதிர்ச்சி தகவல்களை தற்போது வெளியிட்டு உள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி அணியுடன் இணைய பன்னீர்செல்வம் ஆர்வமாக உள்ளார். ஆனால், அவருடன் இருக்கும் சில மாஜி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள்தான் தடையாக உள்ளனர் என்றார்.
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலையில் ஆட்சிக்கும், கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த கொலைக்கு எடப்பாடி அரசின் கவனக்குறைவே காரணம் என அதிரடியாக குற்றம்சாட்டினார்.
மேலும், அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலாவையும், தினகரனையும் அனைவரும் கும்பிட்டார்கள் என்றும்,
ஆனால், சசிகலாவை முதலமைச்சராக்க வேண்டும் என்று எந்தவொரு எம்.எல்.ஏ.க்களும் சொல்லவேயில்லை. அதேபோல் அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றும் யாரும் கூறவில்லை என்று அதிரடியாக கூறினார்.
அதேபோல் டி.டி.வி.தினகரனுக்கு ஆர்.கே. நகர் தொகுதியில் சீட் தருவது குறித்தும் எங்களிடம் எதுவும் கேட்கவில்லை.
அந்த நேரத்தில் 122 எம்எல்ஏக்களில் நானும் ஒருவனாக உட்கார்ந்திருந்தேன். எல்லாவற்றும் கையெழுத்து போட சொன்னார்கள், போட்டோம் என்றார்.
ஆனால், இப்போது எடப்பாடி அணி சசிகலாவையும், தினகரனையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்கிறார்கள்.
எம்.எல்.ஏ.க்களை கேட்டால், ‘ஏன் கட்சியில் சேர்த்தீர்கள்; இப்பொழுது ஏன் நீக்குகிறீர்கள்’ என்று தட்டி கேட்போம். அதனால், எங்களை அவர்கள் கேட்பதேயில்லை. அவர்களுக்கு சாதகமாக ஒரு குரூப் செயல்பட்டு வருகிறது என்று அதிரடியாக குற்றம் சாட்டினார்.
இன்று வரை எடப்பாடி அணிக்கு ஆதரவு தரும் 122 எம்.எல்.ஏ.க்களும் வேறு வழியில்லாமல் அவர்களுக்கு கொத்தடிமைகளாக இருக்கும் சூழ்நிலை தான் உள்ளது.
இவ்வாறு கனகராஜ் கூறினார்.
அவரின் பேட்டியால் எடப்பாடி அணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எம்எல்ஏக்கள் அனைவரும் தங்களது குட்டு உடைந்துவிட்ட மனநிலையில், தாங்கள் எப்படி மக்களை சந்திப்பது என்று பதற்றம் அடைந்து உள்ளனர்.