சென்னை,

ருத்துவர்களின் வேலை நிறுத்தத்தை ஏன் தடுக்க அரசு முன் வரவில்லை என்று தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

மருத்துவ மேல்படிப்புக்கு இதுவரை வழங்கிவந்த 50 சதவிகித இடஒதுக்கீடு எம்சிஐ விதிகளை சுட்டிக்காட்டி உயர்நீதி மன்றம் ரத்து செய்தது.

இதை எதிர்த்து, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 15 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் ஆபரேஷன் தவிர்க்கப்பட்டு வருகிறது. போதிய மருத்துவர்கள் பணியில் இல்லாததால் நோயாளிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரசு மருத்துவர்களின் போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு என வழக்கு தொடரப்பட்டது  இதுகுறித்த வழக்கு விசாரணையில்,  மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை தடுக்க அரசு ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஏழை நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை தடுக்கப்பட்டு வருவது குறித்தும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்  நீதி மன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

வழக்கின் விசாரணை பிற்பகல் தொடரும் என்றும் கூறி உள்ளனர்.