கவான் கிருஷ்ணன் பிறந்த ஆவணி மாத அஷ்டமி, ரோகிணி இணையும் நாளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.  இந்த வருடம் 14/08/2017 அன்று கண்ணன் பிறந்த நாளாகிய கிருஷ்ண ஜெயந்தி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி பூஜை பொதுவாக மாலையில் நடத்தப்படுகிறது.   வீட்டை துடைத்து, அல்லது கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.  பின் மாக்கோலம் இட வேண்டும்.  மாக்கோல மாவினால் வீட்டு வாசலில் இருந்து பூஜை நடக்கும் இடம் வரையில் சிறு பாதங்களை நடந்து வருவதை போல கோலம் இடம் வேண்டும்.  இது கண்ணன் சிறு குழந்தையாக நம் வீட்டுக்குள் நடந்து வந்து பூஜையில் அமர்வதை குறிப்பதாகும்.

காலையில் இருந்தே கிருஷ்ணாஷ்டகம், பாகவதம் போன்ற கண்ணன் சுலோகங்கள் பாட வேண்டும்.   பலவகை தின்பண்டங்களும் செய்ய வேண்டும்.  வெல்லச்சீடை, உப்புச்சீடை, முறுக்கு, அவல், பால்கோவா, வெண்ணெய், பால் மற்றும் அனைத்து பழ வகைகளில் எதெது கிடைக்கிறதோ அவை எல்லாமே நிவேதனத்துக்கு உரியவை ஆகும்.

பூஜை செய்யும் இடத்தில் கிருஷ்ணர் படம், அல்லது விக்கிரகம் வைத்து பூஜை செய்ய வேண்டும்.  சிலர் வீட்டில் அவரவர் வீட்டு வழக்கப்படி, ஒவ்வொரு வருடமும் புது கிருஷ்ணர் பொம்மை வாங்கி வைப்பார்கள்.   படம் அல்லது விக்கிரகத்தின் இருபுறமும் குத்து விளக்குகள் ஏற்றி நிவேதனப் பொருட்களுடன், வெற்றிலை, பாக்கு, உடைத்த தேங்காய் ஆகியவைகளையும் வைத்து,  கிருஷ்ணருக்கு மந்திரம் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.  அர்ச்சனை மந்திரம் தெரியாதவர்கள்,  ஸ்ரீ கிருஷ்ணாய நம என 108 முறை சொல்லி பூவால் ஆராதனை செய்யலாம்.  முடிவில் அனைத்தையும் நிவேதனம் செய்த பின் கிருஷ்ணருக்கு தூப தீபம் காட்டி கற்பூர தீபாரதனையுடன் பூஜையை முடிக்கலாம்.

பக்க்கத்தில் உள்ள கண்ணன் கோயிலுக்கு பூஜை முடிந்த பின் சென்று வழிபட்டு வருவது மேலும் நன்மையைக் கொடுக்கும்    கிராமங்களில் கண்ணன் கோயில்களில் உறியடி திருவிழா நடை பெறுவதுண்டு.