வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்ய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பியுள்ள பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் நீர் நிலைகள் உள்ளதை உறுதி செய்யும் வகையிலான புகைப்படங்களை எடுத்து அனுப்பி உள்ளது. அதை நாசா வெளியிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதனால், அங்கு ஆய்வுகளை நடத்த உலக நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தநிலையில், செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்கு நாசா கடந்த பிப்ரவரி மாதம் பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. இந்த விண்கலம், 7 வாரங்கள் பணம் செய்து பிப்ரவரி மாதம் செவ்வாயை அடைந்து அங்கு ஆய்வு செய்து படங்களை அனுப்பி வருகிறது.
இந்த ரோவரின் முக்கிய பணியே, செவ்வாய் கிரகத்தில் இருந்து பாறை, மண் துகள்களை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதுதான் என்று நாசா அறிவித்திருந்தது. அதன்படி, ‘பெர்சவரன்ஸ் ரோவரில் இணைக்கப்பட்டுள்ள ரோபோ கரத்தில், தரையை துளையிடுவதற்கான கருவியும், துகள்களை சேகரிப்பதற்கான கருவிகளும் பொருத்தப்பட்டு உள்ளன. அதன்படி, அங்குள்ள பாறைகளை துளையிட்டு அதில் இருந்து துகள்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டது. ஆனால், அதன் முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து, தற்போது பள்ளத்தாக்கில் இருந்து படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. அதில், செவ்வாய்கிரகத்தில் ஆற்றுப்படுகை இருப்பது உறுதியாகி உள்ளதுடன், செவ்வாயில் நீர்நிலைகள் இருந்ததற்கான ஆதாரத்தை வலுப்படுத்தி இருப்பதாக நாசா தெரிவித்து உள்ளது. மேலும் தற்போது கிடைத்துள்ள புகைப்படங்கள் புதையுண்ட ஏரி உருவாக்கிய ஆற்றுப்படுகையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி , செவ்வாயில், ஆற்றுப் படுகையின் கீழே உள்ள 3 அடுக்குகளின் வடிவங்கள் நீர் தொடர்ந்து ஓடியதை உறுதிப்படுத்தி இருப்பதாகவும், சுமார் 370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயில் நீர் சுழற்சி இருந்திருக்கலாம் என்றும் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆற்றுப் படுகையின் புகைப்படங்கள் புவி எல்லையை ஒட்டி இருப்பதாக நாசா கூறியுள்ளது. மேலும் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.