போதிய மழை இல்லாத காரணத்தால் தேவதானப்பட்டி மஞ்சளாறு அணை வறண்டு வருவது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் மலையடிவாரத்தில் மஞ்சளாறு அணை அமைந்துள்ளது. வரட்டாறு, மூலையாறு, இருட்டாறு, மஞ்சளாறு ஆகிய மலைகளில் பெய்யும் மழைநீர் இந்த அணைக்கு வருகிறது. மூன்று பக்கமும் மலைகள் சூழ்ந்து நடுவே அமைந்துள்ள அணையின் உயரம் 57அடியாகும். தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் முக்கிய குடிநீர் ஆதாரமாக இந்த அணை உள்ளது. தேனி மாவட்டத்தில் 3148 ஏக்கர் நேரடியாகவும், 6 ஆயிரம் ஏக்கர் மறைமுகமாகவும், திண்டுக்கல் மாவட்டத்தில் நேரடியாக 2111 ஏக்கரும், மறைமுகமாக 3ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது. நடப்பாண்டில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் அணை திறப்பு தாமதமானது. கஜா புயலால் ஒரே நாளில் 6அடி உயர்ந்து அணையின் முழு கொள்ளளவு எட்டியது. ஆனால் அணையின் கொள்ளளவு சமீப நாட்களாக மளமளவென குறைந்துவிட்டது. இதனால் அணையில் நீர் மட்டம் குறைந்துவிட்டது. இதன் காரணமாக தற்போது திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 35.7அடியாக இருந்தது. பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீருக்காக அணை திறக்கப்பட்டு காமாட்சியம்மன் கோயில் வரை ஆற்றில் தண்ணீர் வருகிறது. அங்குள்ள குடிநீர் தொட்டி மற்றும் உறைகிணறு மூலம் நீரேற்றம் செய்து இரு மாவட்டங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் மஞ்சளாறு அணையை நம்பியுள்ள பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.