விருதுநகர்: மலைப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதால் சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை விதித்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதபோல மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், சதுரகிரி மலைப்பகுதிகளில் செல்லும் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். சதுராசலம், சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகைவனம் என்று பெரியோர்களால் போற்றப்படும் சதுரகிரி மலையில் கோயில் கொண்டுள்ளார், சுந்தர மகாலிங்கப் பெருமானார். மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் உண்டு. நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது சதுரகிரி. மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், பஞ்சபூத லிங்கம் என்பர். இந்த மகாலிங்க மலையை ‘சித்தர்கள் வாழும் பூமி’ என்று அழைக்கின்றனர் இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
இந்நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு இம்மாத ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி வருகிற 5-ந் தேதி முதல் 9-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என வனத்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் மேற்கண்ட நாட்களில் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு வர வேண்டாம் எனவும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது.