சென்னை: தமிழக ஆளுநரை திரும்பப் பெற கோரி திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் குடியரசு தலைவரிடம் மனு கொடுக்க முடிவு செய்துள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவசரம், அவசரமாக இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தமிழ்நாட்டில், ஆளுநருக்கும் ஆளும் திமுக தரப்பிற்கும் இடையில் மோதல் நீடித்து வருகிறது. திமுகவின் பல்வேறு அறிவிப்புகளுக்கு எதிரான கருத்துக்களை ஆளுநர் பேசி வருகிறார். ஏற்கனவே நீட் மசோதா விஷயத்தில் தொடங்கிய மோதல், துணைவேந்தர் மசோதாவிலும் நீடித்து வருகிறது. இதற்கிடையில், தமிழ்நாடு ஆன்மிக பூமி என்று பேசிய ஆளுநர்,  கோவையில் நிகழ்ந்தது குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழக அரசை நேரடியாக குற்றம் சாட்டினார். கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ -விடம் ஒப்படைப்பதில் நான்கு நாட்கள் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்றும், உயர்மட்ட பயங்கரவாத சதித்திட்டத்தில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டது கவலை தருவதாகவும் தெரிவித்திருந்தார். இது தமிழ்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து,  மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு செய்து, ஆளுநரை திரும்பப்பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, அந்த மனுவில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அவசரம் அவசரமாக டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, தெலுங்கானா மற்றும் கேரளாவிலும் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் மோதல் முற்றி உள்ளது.