சேலம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம்  112 அடியை கடந்து உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக  தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இதனால், அணைக்கு வரும் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒகேனக்கல்லில் நேற்று 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.  இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு சென்று கொண்டிருக்கிறது.

ன்று காலை முதல் அணைக்கு வரும் நீரின் அளவு 10,904 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால்  அணையின் நீர் மட்டம் 112.28 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 81.69 டி.எம்.சி ஆக இருப்பதாக அணையின் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,000 கன அடியில் இருந்து 100 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டுவரும் நீரின் அளவும் வினாடிக்கு 300 கன அடியில் இருந்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.