ண்டிபட்டி

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் நீர் மட்டம் உயர்வதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது.  இந்த அணை மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்குக் குடிநீர் ஆதாரமாக உள்ளது.  கடந்த சில நாட்களா தேனி மாவட்டத்தில் வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மேலும் வைகை அணையின் முக்கிய நீர் ஆதாரமான முல்லைப் பெரியாற்றிலிருந்து வைகை அணைக்குத் தொடர்ந்து நீர் திறக்கப்படுகிறது.  வைகை அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 565 கன அடியாக உள்ளது.  அணையில் இருந்து விநாடிக்கு 769 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

இருந்தும் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.   தற்போது வைகை அணையின் மொத்த உயரமான 71 அடியில் 66 அடியை நீர் மட்டம் எட்டி உள்ளது.  இதையொட்டி கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு கரையோரத்தில் உள்ளோர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.