தென் பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் கரையோர கிராமங்களுக்குள் புகுந்ததால் மக்கள் மொட்டைமாடிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அதிகனமழை பெய்ததை தொடர்ந்து திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
இதனால் ஏரிகளில் நீர் நிரம்பியதால் வயல் வாய்க்கால்கள் எங்கும் தண்ணீர் தேங்கியுள்ளது.
கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பியதால் சாத்தனூர் அணை திறக்கப்பட்டது ஏற்கனவே வீடூர் அணை திறக்கப்பட்ட நிலையில் சாத்தனூர் அணையும் திறக்கப்பட்டதால் தென் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் வெள்ள நீர் சாலையின் குறுக்கே செல்வதால் பன்ருட்டி – விழுப்புரம் இடையேயான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கள்ளிப்பட்டு, குச்சிபாளையம், இருவேல்பட்டு உள்ளிட்ட தென் பெண்ணை ஆற்றங்கரையோர கிராமங்களில் இடுப்பளவு முதல் மார்பளவு தண்ணீர் வரை புகுந்துள்ளது.
இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்துள்ளனர், குடிசை வீடுகளில் இருப்பவர்கள் அருகில் உள்ள வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
வெள்ள நீரால் சூழப்பட்ட குடியிருப்புகளில் சிக்கியுள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சாரல் மற்றும் குளிரில் அவதிப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் உணவு பொட்டலங்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், பால் பாக்கெட்டுகள் போன்றவற்றை படகு மூலம் கொண்டு வந்து அளித்து வருகின்றனர்.