தொண்டி அருகே கிராம பகுதிகளில் கடுமையான குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால் திருவாடானை-தொண்டி இடையில் தேசிய நெடுஞ்சாலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்ப்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.
காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் ஊராட்சிகளுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்ணீர் மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையின் வழியாகத்தான் குழாய்களில் வருகிறது. கடந்த சில மாதங்களாக இச்சாலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. அதிகாரிகள் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சரி செய்வதால் மற்ற இடங்களில் தண்ணீர் தினமும் வெளியேறுகிறது.
இதனால் தொண்டி பேரூராட்சி பகுதிகள் நம்புதாளை, முகிழ்த்தகம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு வழங்கும் தண்ணீரின் அளவு குறைந்து விடுகிறது. இதனால் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் தண்ணீருக்கு அவதிப்படும் நிலை ஏற்ப்படுகிறது. திருவெற்றியூர் விளக்கு, புதுக்குடி, தினையத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் தண்ணீர் வெளியேறுவதை பார்க்க முடிகிறது. இப்பதி வெளியேறும் தண்ணீரே ஒரு கிராமத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் என்பதில் ஐயமில்லை. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து உடைப்புகளையும் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தொண்டி காதர் கூறியது, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகரிப்பினால் அழுத்தம் ஏற்பட்டு குழாய்கள் உடைந்து விடுகிறது. இதை தவிர்க்க புதிதாக இரும்பு குழாய்களை பதிக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வப்போது சரி செய்யும் செலவை குறைத்து விடலாம். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இம்முயற்சியில் ஈடுபட்டால் மட்டுமே அனைத்து தண்ணீரும் வந்தடையும். இல்லையேல் பாதி தண்ணீர் வீணாக வேளியேறிவிடும் இதனால் யாருக்கும் பயன் இல்லை என்றார்.