திருவண்ணாமலையில் இளம் பெண் ஒருவருக்கு 2வது முறையாக ஆம்புலென்சில் குழந்தை பிறந்துள்ளது அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், விவசாயி, இவரது மனைவி ரேவதி. தம்பதியருக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த ரேவதிக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள கொளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்ததில் ரேவதிக்கு பனிக்குடம் உடைந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, ரேவதியை மேல்சிகிச்சைக்காக உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரேவதிக்கு பிரசவ வலி அதிகரித்தது. கீழ்பென்னாத்தூர் கடந்து சிறிது தூரம் சென்றபோது, மருத்துவ உதவியாளர் குமரன், ரேவதிக்கு பிரசவம் பார்த்தார். இதையடுத்து, ஆம்புலன்சிலேயே ரேவதிக்கு சுகப்பிரசவம் நடந்து ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர், தாயும், சேயும் பாதுகாப்பாக அழைத்து சென்று, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு தாயும், சேயும் சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கின்றனர். ஏற்கனவே, 2 ஆண்டுகளுக்கு முன்பு ரேவதி தனது முதல் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, ஆம்புலன்சிலேயே பெண் குழந்தை பிறந்தது. அப்போது, ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர் குமரன் தான் ரேவதிக்கு பிரசவம் பார்த்துள்ளார். தற்போது, பிறந்துள்ள ஆண் குழந்தைக்கும் அவரே பிரசவம் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.