சென்னை:
சென்னை மெட்ரோ ரயிலின் வடசென்னைக்கு பாதை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. இதையடுத்து இந்த மாத இறுதியில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, 2021ம் ஆண்டு ஜனவரியில் பயணிகள் ரயில் இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. ஏற்கனவே முதல் கட்ட பணிகள் முடிவடைந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக விமான நிலையம் – வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை- சென்ட்ரல் இடையே மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.
அதைத்தொடர்ந்து, பயணிகள் – பொதுமக்கள் வரவேற்பை தொடர்ந்து வண்ணாரப்பேட்டை – விம்கோ நகருக்கு 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில், 2 சுரங்க ரெயில் நிலையங்களும் 6 உயர்மட்ட ரெயில் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மின்சார கேபிள்கள், தொலைத்தொடர்பு சிக்னல் கருவிகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த பணிகள் ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும் என ஏற்கனவே திட்டமிட்டு அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கு மற்றும் பல்வேறு பிரச்சினைகளால், தாமதமானது. தற்போது பணிகள் முடிவடைந்துள்ளதால், இந்த மாத இறுதியில் சோதன ஓட்டம் நடத்தப்படும் என்றும், அதைத்தொடர்ந்து, பாதுகாப்பு ஆணையரின் ஆய்வுக்குப் பின் ரெயில்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டதும் பயணிகள் நேரடியாக விம்கோநகரில் இருந்து எந்தவித தடங்களுமின்றி, விமான நிலையத்துக்கு 32 கிலோ மீட்டர் தூரத்தை எளிதில் கடக்க முடியும்.