ராய்ப்பூர்:

செல்போன் வெடித்து சிறுவன் பலியான சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் குட்ரபாரா கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ரவி சன்வான்(12). இவர் கடந்த திங்கள் அன்று இரவு, தனது நண்பருடன் அமர்ந்து செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது மொபைல் சார்ஜ் ஏறிக் கொண்டிருந்தது.  அப்போது திடீரென செல்போன் பெரும் சத்தத்துடன் வெடித்தது. இதில் சிறுவனுக்கு வயிற்றில் படுகாயம் ஏற்பட்டு, குடல் வெளியே வந்துவிட்டது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனே தடிமனான துணியால் வயிற்றை இறுகச் சுற்றி, அம்பிகாபூர் மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றனர்.  அங்கு முதற்கட்ட சிகிச்சை முடிந்த பிறகு, மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால் ஊதிய உயர்வு கோரி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்ததால், சிறுவனை உடனே அழைத்துச் செல்ல முடியவில்லை.

இந்நிலையில் மறுநாள் காலை அம்பிகாபூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  சிறுவனஐ அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனுக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்களில் சிறுவன் ரவி சன்வான் உயிரிழந்தார். காயம் பட்ட இவரது நண்பரான இன்னொரு சிறுவனுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.