கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை  தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு ஊழியர்களும், உறவினர்களும் அள்ளி சென்றதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி கிடங்கு பொறுப்பாளரை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட  மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில், நாகை மாவட்டம் அதிக அளவில்  பாதிப்பை சந்தித்தது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்களை பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் வாரி வழங்கியது. இவ்வாறு வாரி வழங்கிய நிவாரண பொருட்கள் எல்லாம்  நாகை மருத்துவமனை  சாலையில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்களில் வைக்கப்பட்டது. அங்கிருந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த கிடங்கில் பணிபுரியும் ஊழியர்களும், அவர்களது உறவினர்களும் நிவாரண பொருட்களை தங்களது வாகனங்களில் அள்ளிச் செல்வதாக அருகிலுள்ள நம்பியார் நகர் மீனவ கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையறிந்த நம்பியார் நகரை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் அந்த சேமிப்பு கிடங்கிற்கு சென்று பொருட்களை அள்ளிச் சென்றவர்களை தடுத்து நிறுத்தி விபரம் கேட்டனர். அப்போது, கிடங்கில் வைத்திருந்த பொருட்கள்  எல்லாம் சேதமடைந்துவிட்டது. கிடங்கை காலி செய்ய வேண்டும் என கூறினர். இதனால் அங்கிருந்து பொருட்களை எடுத்து சென்றவர்களுக்கும், மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, கிடங்கில் இருந்த கிடங்கு பொறுப்பாளர் மோகனிடம் பாதிக்கப்பட்ட எங்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை மற்றவர்களுக்கு எடுத்து செல்ல யார் அனுமதி கொடுத்தது என கேட்டு அவரை முற்றுகையிட்டனர். இதற்கு அவர் மழுப்பலாக பதில் அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

பின்னர் நிவாரன பொருட்களை பிடுங்கி கிடங்கின் உள்ளே வைத்த மக்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய, பல லட்ச ரூபாய் நிவாரண  பொருட்களை சேமிப்பு கிடங்கில் இதுநாள் வரை வழங்காமல் இருப்பில் வைத்திருப்பது வேதனை அளிப்பதாக வருத்தம் தெரிவித்தனர்.