பவ்தீப் கங் 35 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் இருக்கும் அனுபவமிக்க பத்திரிகையாளர் ஆவார். இவர் ஒரு இணையதள பத்திரிக்கைக்கு கருப்பு பண ஒழிப்பு பற்றி எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவித்திருப்பதாவது:

notes4

மத்திய அரசு உண்மையிலேயே கறுப்பு பணத்தின் மீதான போரை துவங்குவதாக இருந்திருந்தால் அதை முதலில் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடையில் இருந்து துவங்கியிருக்க வேண்டும். ரூ.20,000 குறைவாக பெறும் நன்கொடைக்கு கணக்கு காட்ட தேவையில்லை என்று வருமானவரி சட்டம் (ஆர்.பி.ஏ) 1951 சொல்லுகிறது. அத்தனை கறுப்புப் பண ஊழலுக்கும் ஊற்றுக்கண்ணாக விளங்குவது இந்த சட்டத்தில் உள்ள ஓட்டைதான்.
ஒவ்வொரு ஆண்டும் குரு பூர்ணிமா தினத்தன்று ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தங்களுக்கு அருகே உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களில் வைக்கப்பட்டிருக்கும் பக்வா த்வாஜ் என்ற அவ்வமைப்பின் கொடியின் காலருகே வெள்ளைக்கவரில் காணிக்கைகளை பவ்யமாக வரிசையில் வந்து சமர்ப்பிப்பது வழக்கம். இது குருதட்சணை என்று அழைக்கபடுகிறது. இதில் கிடைக்கும் பணத்தில்தான் அவ்வமைப்பின் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வளவு ஏன், நமது பிரதமர் மோடி கூட ஒரு ஆர்.எஸ்.எஸ் சொற்பொழிவாளராக அந்தப் பணத்தை பயன்படுத்தியவர்தான்.
அந்த வெள்ளைக்கவரினுள் அடைத்து வைக்கப்பட்டு தரப்படும் பணம் கருப்பா வெள்ளையா அல்லது தற்போது பளபளப்பாக வெளிவந்துள்ள ரோஸ்கலர் 2000 நோட்டா என்பதெல்லாம் கணக்கு கிடையாது. ஆனால் இது போன்ற நிதி திரட்டல் மூலம் பணம் குவிகிறது என்பது மட்டும் உறுதி. நமது பிரதமர் மோடி ஏன் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திடம் இது போன்ற நிதி திரட்டல்களை வங்கி வழியாகவோ அல்லது காசோலைகள் மூலமோ பெற்றுக்கொள்ளும்படி ஏன் அறிவுறுத்தக் கூடாது.
ரூ.20,000 ஆயிரத்துக்கு குறைவாக பெற்ற நன்கொடைக்கு கணக்கு காட்டத் தேவையில்லை என்ற சட்டம் உடனடியாக திருத்தப்பட வேண்டும். பல கட்சிகளில் கூப்பன் அடித்து நிதி வசூல் பண்ணும் வேலைகள் மூலம் பெரும் நிதி திரட்டப்படுகிறது. ஒவ்வொரு கூப்பனும் 20,000-க்கு குறைவான பணம் பெறும்படி அச்சடிக்கப்படுவதால் குவியும் பணத்துக்கு கணக்கே காட்டப்படுவதில்லை. அதுமட்டுமல்ல தலைவர்களுக்கு இடப்படும் ரூபாய் நோட்டு மாலைகள் கூட திட்டமிட்டு 20,000 ரூபாய்க்கு சற்று குறைவாகவே பின்னப்பட்டு தலைவர்கள் கழுத்துக்களில் போடப்படுகின்றன. சொத்து குவிப்பு வழக்கு ஒன்றில் உச்சநீதி மன்றம் கேட்ட கேள்விக்கு உ.பி முன்னாள் முதல்வர் மாயாவதி தொண்டர்கள் கொஞ்ச கொஞ்சமாக கொடுத்த நிதி என்று சொல்லி தப்பிக்கொண்டார்.
1996-ல் கொண்டுவரப்பட்ட வருமானவரி சட்டத்தின்படி அரசியல் கட்சிகள் தங்கள் வருமான வரிக்கணக்கை ஒப்படைக்க வேண்டும். உச்சநீதி மன்ற உத்தரவுப்படி அவர்கள் தங்கள் கணக்கு வழக்குகளை தேர்தல் ஆணையத்திடம் காட்ட வேண்டும். அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளுக்கு 100% வருமான வரி விலக்கு உண்டு. Association for Democratic Reforms (ADR) என்ற அமைப்பின் ஆய்வுப்படி அரசியல் கட்சிகள் சரியான வருமான விபரங்களை ஒப்படைப்பதில்லை நன்கொடையாளர்களின் பான் கார்டு எண்கள் பல வேளைகளில் காட்டப்படுவதில்லை. இது நன்கொடையாளர்களின் பாதுகாப்புக்காக என்று அரசியல் கட்சிகள் சொல்லுகின்றன. ஏனெனில் எதிரிகளால் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்ப்படக்கூடும் என்பது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
இதன் விளைவாக ஒருபக்கம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் கறுப்புப் பணமாக குவிகிறது, இன்னொருபக்கம் நன்கொடையாளர்களின் பாதுகாப்பை காரணமாக காட்டி கணக்குகள் மறைக்கப்படுகின்றன. இந்த விஷயத்தில் மத்திய தகவல் கமிஷன் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாமல் கையறு நிலையில் உள்ளது.
புழக்கத்தில் இருக்கும் 500,1000 நோட்டுக்களை தடை செய்தால் மட்டும் கறுப்புப்பணம் ஒழிந்துவிடாது. மத்திய அரசு கறுப்பு பணத்தை உண்மையிலேயே தடை செய்ய விரும்பினால் பாரதிய ஜனதா உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோடிக்கோடியாக கறுப்புப் பணத்தை குவிக்க உதவும் அந்த 20,000 ரூபாய் சட்ட ஓட்டையை முதலில் அடைக்கட்டும். ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு எங்கிருந்து எவ்வளவு பணம் வந்தது என்ற விபரங்களை சரியாக காட்ட வழிவகைகள் செய்யப்படவேண்டும். அம்பனிகளும் அதானிகளும் எந்த கட்சிக்கு எவ்வளவு நிதி அளித்தார்கள் போன்ற விபரங்கள் மக்கள் மன்றத்துக்கு வந்தாக வேண்டும்.
அரசின் இந்த கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையால் பொது மக்கள் நரக வேதனையை தற்போது அனுபவித்து வருகிறார்கள். மக்களின் இந்த வலியை அரசு ஆற்ற விரும்பினால் பாஜக உள்ளிட அரசியல் கட்சிகள் மீது அதன் இரும்புக்கரம் நீளட்டும்.
Article by Bhavdeep Kang for www.freepressjournal.in